மறத்தல் தகுமோ? - ஹவில்தார் அப்துல் ஹமீது
பாகிஸ்தான் இராணுவ அதிகாரி யாரையாவது நீங்கள் கோபப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அவர்களிடம் 'அசல் உத்தர்' என்று சொல்லிப் பாருங்கள். உடனே முகம் இறுகிவிடும். கண்கள் கோபத்தில் துடிக்கும். அந்தச் சொற்களுக்கு அப்படி ஒரு மகிமை. அசல் உத்தர் என்றால் பஞ்சாபி மொழியில் 'நிஜமான பதிலடி' (Fitting Reply) என்று அர்த்தம். அந்தச் சொற்கள், நேரடியாக அவர்களுக்கு நினைவூட்டுவது குறிப்பிட்ட ஒரு தோல்வியைத்தான். ஆம், அவர்களால் 1965-ம் ஆண்டு இந்தியா அவர்களுக்குக் கொடுத்த 'அசல் உத்தர்' அத்தனை சீக்கிரம் மறக்கக் கூடியதா, என்ன? இந்தியாவோடு பாகிஸ்தான் புரிந்த மூன்று பெரும் போர்களில்,1965-ம் வருடப் போருக்குத் தனி முக்கியத்துவம் உண்டு. மற்ற இரு போர்களைப்போல இது அத்தனை பெரிய தாக்கத்தை வெளி உலகில் ஏற்படுத்தா விட்டாலும், உள்ளூர பாகிஸ்தானின் அகந்தையைத் தூள்தூளாக உடைத்த யுத்தம் அது!
அந்தக் கால கட்டத்தில், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் மிக நெருங்கிய உறவு கொண்டிருந்தது. இந்தியாவோ கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தது. சீன யுத்தத்தின் போது ஏற்பட்ட பின்னடைவு, பண்டித நேரு அவர்களின் மரணம் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் எனப் பல்வேறு நெருக்கடிகளை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்த காலம் அது.
அமெரிக்க சார்புநிலை எடுத்திருந்ததால், அப்போது பாகிஸ்தானுக்குப் பல்வேறு போர்த் தளவாடங்களை அமெரிக்கா இலவசமாக வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அவற்றில் முக்கியமானது அதிநவீன பேட்டன் டாங்கிகள், சாபர் ரக நவீன விமானங்கள், மற்றும் புத்தம் புதிய ஸ்டார் ஃபைட்டர் ரகத் தாக்குதல் விமானங்கள். இவை மட்டுமின்றி, அனைத்து விதமான நவீன ஆயுதங்களையும் பயன்படுத்துவது எப்படி என்கிற பயிற்சிகள், உதிரி பாகங்கள், ராடார்கள் என அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கி வந்த்து. இந்தியாவிடம் பழைய ரக ஷர்மன் மற்றும் செஞ்சுரியன் டாங்கிகளும், உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட பழைய மாடல் விமானங்களும்தான் இருந்தன.
அமெரிக்காவின் ஆதரவு இருந்ததால், தம்மைப் பற்றிய மிகையான மதிப்பீட்டில் பாகிஸ்தான் இராணுவம் மிதந்து கொண்டிருந்தது. தமது இராணுவ வீரர்களைப் பற்றியும், அவர்களுடைய போர்த்திறன் பற்றியும் மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருந்த அவர்கள், 'எங்கள் நாட்டு வீரன் ஒருவன், நான்கு இந்திய வீரர்களுக்குச் சம்ம்!' என்று எகத்தாளம் பேசியும், பேட்டி கொடுத்தும் வந்தார்கள்.
அதிநவீன ஆயுதங்கள், அவற்றைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், இராணுவம் எதைச் செய்தாலும் அதை ஆதரிக்கக்கூடிய இராணுவ ஆட்சி ... இத்தனைக்கும் மேலாக அமெரிக்காவின் தயவு! சும்மாவே கால் பிராண்டும் பாகிஸ்தானுக்கு இந்தச் சூழ்நிலைகள் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கத் தூண்டாதா என்ன! 'இதுதான் தக்க தருணம், பலநாள் வஞ்சத்தைத் தீர்க்க ...' என்ற ரீதியில் அந்த உணர்வுக்கு அங்கே சிலர் தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். 1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி இந்தியா மீது போர் தொடுத்தே விட்டது பாகிஸ்தான். 'ஆபரேஷன் கிராண்ட் ஸ்லாம்' என்று அவர்கள் அதற்குப் பெயரிட்டிருந்தார்கள்.
ஆணவத்துக்குச் சரியான அடி! 22 நாட்கள் நடந்த யுத்தத்தில், இந்திய இராணுவம் பல்வேறு இடங்களில், பாகிஸ்தான் படைகளை ஓடஓடத் துரத்தியடித்தது. சுமார் 1,500 சதுர மைல் அளவுக்கு பாகிஸ்தான் நாட்டுப் பகுதியைப் பிடித்தது. லாகூர், சியால்கோட் நகரங்களையும் பிடிக்கவிருந்த நிலையில், இரஷ்யா மற்றும் ஐ.நா. சபையின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் தாஷ்கண்டில் நடந்த பேச்சு வார்த்தையின்படி பிப்ரவரி 25, 1966-ம் ஆண்டு 'தாஷ்கண்ட் ஒப்பந்தம்' கையெழுத்தானது.
1965-ல் நடந்த போர், டாங்கிகளிடையே நடந்த தாக்குதல்களுக்குப் பிரசித்தி பெற்றது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 471 பேட்டன் டாங்கிகள் அழிக்கப்பட்டு, பலது கைப்பற்றப்பட்ட சம்பவம் உலக இராணுவ வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.
போர்முனையில் நடந்த அனைத்து மோதல்களிலும் 'அசல் உத்தர்' என்று குறிப்பிட்ட தாக்குதல் மிகப் பிரசித்தி பெற்றது. அத்தாக்குதலின் எதிரொலியாகவே பாகிஸ்தானின் பல பேட்டன் டாங்கிகள் கைப்பற்றப் பட்டன. போரில் சிதைக்கப்பட்ட டாங்கிகள் பல, போர் முடிந்த பின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தார்ன் தரன் (Tarn Taran) மாவட்டத்தில் உள்ள கேம்கரண் என்ற ஊரில் குவிக்கப்பட்டன. 'பாக் டாங்குகளின் கல்லறை' என்றும், 'பேட்டன் நகர்' என்றும் அந்த ஏரியாவுக்குப் பெயர் சூட்டி, இந்திய இராணுவத்தினரின் வீரத்துக்குச் சாட்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
யுத்தத்தில் 'அசல் உத்தர்' என்றால்... அது அசல் தியாகிகளின் சாதனையாகத்தானே இருக்க முடியும்? இங்கேயும் இருந்தார் ஒரு தியாகி... அவர்தான் ஹவில்தார் அப்துல் ஹமீது. அவருடைய வீரத்தாக்குதல்தான் போரின் திசையையே மாற்றி விட்டது. எது பாகிஸ்தானின் வலிமை என்று அவர்கள் இறுமாந்திருந்தார்களோ... அதைத் தகர்த்தெறிந்தவர் ஹவில்தார் அப்துல் ஹமீது!
அவருடைய மிக நுணுக்கமான பார்வை, படுதந்திரமான தாக்குதல் முறை, பாகிஸ்தானை மட்டுமல்ல... அமெரிக்காவையே அலற வைத்து விட்டது.
மாவீரன் அப்துல் ஹமீது, ஜூலை 1, 1933 அன்று உத்திரப்பிரதேச மாநிலம், தாமுப்பூர் என்ற கிராமத்தில் உஸ்மான் ஃபரூக்கி என்ற ஓர் ஏழை போலிஸ்காரரின் மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின், இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். 1954-ம் ஆண்டு கிரெனெடியர்ஸ் படைப் பிரிவில் சேர்க்கப் பட்டு, பதவி உயர்வு பெற்று, ஹவில்தார் (ஏட்டு) அந்தஸ்தில் அவர் பணி புரிந்து வந்த நிலையில்தான் 1965-ல் யுத்தம் வெடித்தது. பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த முதல் சிறப்பு ஆயுதப் படைப் பிரிவின் திட்டம் - பஞ்சாப் மாநிலத்தின் தார்ன்தரன் மாவட்டத்தின் உள்ளே ஊடுருவித் தாக்கி, தங்கள் பேட்டன் டாங்கிகளின் வலிமையினால் விறுவிறுவென முன்னேறுவது! அமெரிக்காவின் பெருமைக்குரிய தயாரிப்பான பேட்டன் டாங்கிகள் பலநூறு அணிவகுத்துச் செல்ல, பல்லாயிரம் போர்வீரர்களுடன் தாக்குதலை ஆரம்பித்தது பாகிஸ்தான்.
சரியாகச் சொல்வதானால், 'அசல் உத்தர்' என்ற அந்த சாதனைத் தாக்குதல் செப்டம்பர் 6-ம் தேதி அரங்கேறியது. அப்துல் ஹமீது பங்கு பெற்றிருந்த கிரெனெடியர்ஸ் பிரிவு முதலில் நடுங்கித்தான் போனது. பாகிஸ்தான் இராணுவ பேட்டன் டாங்கிகள் அப்படியொரு குண்டு மழை பொழிந்தன. எங்கும் வெடிச்சத்தம் பயங்கரமாக எதிரொலித்தது. நமது படையினரால், பழைய ஷர்மன் டாங்கிகளைக் கொண்டு தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கேம்கரண் டவுன் பாகிஸ்தான் படையின் வசமானது. எதிரிப் படையினர் மெதுவாக கேம்கரணிலிருந்து சீமா கிராமத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர். நிலைகுலைந்து போயிருந்த நம் படைவீரர்களுக்கு உற்சாகம் தரும் குரலாக ஒலித்தது அப்துல் ஹமீதின் அழைப்பு! "ம்... ம்... வாருங்கள்... அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தாக்குதலைப் பதிலடியாகத் தரப் போகிறோம்" என்று கூறிக்கொண்டே தம் ஜீப்பில் ஏறிப் பாய்ந்தார் ஹமீது. சற்றுத் தயக்கத்துடன்தான் பின்தொடர்ந்தனர் அவரது படைப்பிரிவினர்.
புராணக் கதைகளில் நாம் கேட்டிருப்போம் - எத்தனை பெரிய வீரனுக்கும் எங்கேனும் ஓரிடத்தில் பலவீனம் இருக்குமென்று! கிருஷ்ணனுக்குக் கால் விரலில், கிரேக்க மாவீரன் அக்கிலஸுக்குக் குதிகாலில் என்றெல்லாம் உதாரணங்கள் உண்டு. சர்வ வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பு பேட்டன் டாங்கிகளுக்கு அந்தப் பலவீனம் அவற்றின் பினபுறத்தில் இருந்தது. அவற்றின் பினபுறத் தடுப்புத் தகடு அத்தனை உறுதியாக இல்லாமல், மெல்லியதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பலவீனத்தை எப்படியோ கண்டறிந்து விட்ட அப்துல் ஹமீது, அந்த டாங்கிகளைப் பின்புறமிருந்து தாக்கத் திட்டமிட்டார்.
எதிர்பார்த்தபடியே பின்புறம் போயும் ஆயிற்று... "ட... ட... ட... ட...டுமீல்!" பயங்கர சத்தத்துடன் பேட்டன் டாங்கி வெடிக்கிறது. அத்தனை நவீன டாங்கி, இப்படி 'பிஸ்கோத்து'த் துப்பாக்கித் தோட்டாவுக்கே வெடித்து விடுகிறதே எனத் திகைத்துப் போகிறார்கள் நம் வீரர்கள். ஹமீது மீண்டும் சுடுகிறார்.
"ட... ட... ட... ட...டுமீல்!" இன்னொரு டாங்கி அவுட்.
இப்படியே 7 பேட்டன் டாங்கிகளைத் தனி மனிதராகச் சுட்டு அழித்தார் ஹமீது.
எதிரிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். டாங்கிகளை மெதுவாக ரோட்டை விட்டு வயல் வெளியில் இறக்கி அப்படியே பின்வாங்க நினைத்தனர்.
அமெரிக்காவின் ஆயுத நவீனத்தனத்தை நினைத்து நினைத்து அந்த டாங்கிகளை அதுவரை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கு, இப்படி அவற்றைக் கொசு போலத் தனி மனிதராக அப்துல் ஹமீது நசுக்கியது ஏகமாகவே உசுப்பிவிட்டது. இழந்த நம்பிக்கையை முழுதாகத் திரும்பப் பெற்றவர்களாக ஆக்ரோஷத்துடன் தாக்குதலைத் தொடர்ந்தனர் அவர்கள்.
திரும்ப எத்தனித்து வயல்வெளிகளில் இறங்கிய பேட்டன் டாங்கிகளோ, சேற்றில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தன. பதில் தாக்குதலைத் தொடர்ந்த இந்தியப் படையினர் கோழியை அமுக்குவது போல் அவற்றைச் சுற்றி வளைத்துப் பிடித்து அழித்தனர்.
ஆனால், அப்துல் ஹமீது என்ற அந்த மாவீரனின் வீரத் தாக்குதல் வெகுநேரம் நீடிக்கவில்லை. பின் வாங்கி ஓடிய பாகிஸ்தான் படையினரின் பீரங்கித் தாக்குதலில், உடல் துளைக்கப்பட்டு அவர் வீர மரணமடைந்தார்.
தமது தனி மனித வீரதீரத்தால், ஒரு யுத்தத்தின் நிலையையும், ஒரு நாட்டின் சரித்திரத்தையும் தம் உயிரைக் கொடுத்து மாற்றி எழுதி விட்டார் அப்துல் ஹமீது. வீரத் தியாகியான அப்துல் ஹமீதுக்கு பாரத நாட்டின் உயரிய வீரப்பதக்கமான 'பரம்வீர் சக்ரா' வழங்கப்பட்டது.
பொதுவாக இராணுவத்தில் வீரதீரப் பதக்கங்களைப் பெறும் வாய்ப்பு, படைகளைத் தலைமை ஏற்று நடத்திச் செல்லும் அதிகாரிகளுக்கே அதிகம் உண்டு. அதை மாற்றித் தம் தியாகத்திலும் புது விதி படைத்தவர் அப்துல் ஹமீது. அவ்வீரத் திருமகனின் கல்லறை பஞ்சாப் மாநிலம் சீமோ கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் மரங்கள், உதிர்ந்த இலைகள், நடுவில் அவரது சமாதி. பச்சைத் துணி போர்த்திய நிலையில், சமாதியில் ஒரு கல்வெட்டு. வீரத்திருமகனின் செயற்கரிய செயலை வியந்து பாராட்டி வெவ்வேறு மொழிகளில் சிலிர்க்கிறது அந்தக் கல்வெட்டு! அந்தக் கல்லறையை இன்றும் பராமரித்து வருபவர் 70 வயது காஷ்மீர் சிங் ... இவர் சீமா கிராமத்தைச் சேர்ந்த முதியவர்.
"அந்த சாகசம் நிகழ்ந்தபோது நான் வாலிபனாக இருந்தேன். பாகிஸ்தான் டாங்கிகள் எங்களது பயிர்களை எல்லாம் நாசம் செய்தபடி வந்தன. அவர்களது இலக்கு பிக்கிவிந்து என்ற கிராமம். அப்போதுதான் அப்துல் ஹமீது வந்தார்... தந்தார் தக்க பதிலடி ('அசல் உத்தர்')" என்று சிலிர்ப்போடு சொல்லிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.
அப்துல் ஹமீதின் வீரம் பூராகுனா, அன்சல், நூரா, கரீம்பூர், அமர்கோட் ஆகிய சுற்றுப்புறக் கிராமங்களில் இப்போதும் கதைப் பாட்டாக ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், அந்தக் குக்கிராமங்களைத் தாண்டி... நகரத்தில் வாழும் நம்மைப் போன்றவர்களுக்கு அப்துல் ஹமீதின் பெயர் தெரியாது. தமது மதிவீரத்தால், மதிநுட்பத்தால் ஒரு யுத்தத்தையே வென்று கொடுத்த அந்த வீரம் மறப்பதற்குரியதா, சொல்லுங்கள்!
பெட்டிச்செய்திகள்;
பேட்டன் டாங்கி! - இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்க ஜெனரலாக இருந்த ஜார்ஜ் பேட்டன், நினைவாகப் பெயரிடப்பட்டவை பேட்டன் டாங்கிகள். பல்வேறு மாடல்கள் இதற்குண்டு. அமெரிக்கா, பாகிஸ்தான் இராணுவத்துக்கு சுமார் 400 பேட்டன் டாங்கிகளை இலவசமாகக் கொடுத்து அதற்குப் பயிற்சிகளையும் கொடுத்தது. அதில்வி-48 எனப்படும் குறிப்பிட்ட அந்த டாங்கிகள் (பலவீனமான பின்புறம்!), அப்துல் ஹமீதின் வீரத் தாக்குதலுக்குப் பின், அமெரிக்காவால் மறுஆய்வு செய்யப்பட்டு அந்த மாடல் தயாரிப்பதே நிறுத்தப்பட்டது.
பர்வேஸ் முஷ்ரப்: பிற்காலத்தில் பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பேற்று, கார்கில் யுத்தத்தை இந்தியா மீது திணித்த பர்வேஸ் முஷ்ரப் 1965-ம் ஆண்டு யுத்தத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஒன்றாவது ஆயுதப் பிரிவில், (1st armour division) ஓர் இளம் அதிகாரியாகப் பணியாற்றியவர். அப்துல் ஹமீதின் மறக்க முடியாத பதிலடிதான் பர்வேஸ் முஷ்ரப்பின் நெஞ்சில் என்றும் நீங்காத வடுவாக ... வஞ்சமாக ... இருந்து பிற்காலத்தில் இந்தியாவுக்கு எதிரான அவரது நடவடிக்கைகளை வடிவமைக்க மையப்புள்ளியாக இருந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆர்வலர்களின் கணிப்பு.
(நன்றி: டாக்டர்.பா. ஸ்ரீகாந்த் - ஜூனியர் விகடன் - 11/10/2209 மற்றும் 14/10/2009 இதழ்கள்)
Chat with our AI personalities
Abdul Rahman al-Amri was born on 1973-04-17.
Idris Abdul Karim was born on 1976-11-29.
Abdul Latif Berry was born in 1948.
Abdul Munim Wassel died in 2002.
Ghaith Abdul-Ahad was born in 1975.